Monday, 28 March 2011

சபாலிங்கம் கிண்ணத்தை கொக்குவில் இந்து சுவீகரித்தது.


ஏற்கனவே இந்துக்களின் சமரில் வெற்றி வாகை சூடிய கொக்குவில் இந்துக் கல்லூரி யாழ் இந்துவுடன் வருடம் தோறும் நடக்கும் சபாலிங்கம் கிண்ணத்திற்கான ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியாராகவும் உப அதிபராகவும், யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றிய விளயாட்டு வீரரும் யாழ் பாடசாலை விளையாட்டுக் கழகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றியவருமான திரு இ. சபாலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடக்கும் வருடாந்த 50 ஓவர் துடுப்பெடுத்தாட்டப் போட்டி மார்ச் 26-ம் திகதி சனிக்கிழமை கொக்குவில் இந்து மைதானத்தில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி சகல இலக்கினையும் இழந்து 49 பந்து பரிமாற்றம் முடிவில் 306 ஓட்டங்களைப் பெற்றது.ராகுலன் 72, திவாகர் 52, சம்பவன் ஆட்டம் இழக்காமல் 32, சத்தியன் 42, பங்குஷன் 21, உத்தமகுமரன் 22 தமது அணி சார்பாக ஓட்டங்களைப் பெற்றனர்.பந்து வீச்சில் யஸ்மினன் 10 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களையும் வாமணன் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 53 ஓட்டங் களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். 306 ஓட்டங்களை நோக்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ். இந்துக் கல்லூரி அணியின் ஆரம்ப இலக்குகள் சொற்ப ஓட்டங்களில் சாய்க்கப்பட்டன. நீருஜனும் செந்தூரனும் இணைந்து தமது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி யாழ். இந்துக்கல்லூரியுடைய ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இந்தச் சோடி இணைப்பாட்ட ஓட்டமாக 108 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டது. யாழ்.இந்துக்கல்லூரி அணி 46 பந்துப் பரிமாற்றங்களுக்கு அனைத்து இலக்கினையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. நிருஷன் 88 ஓட்டங்களையும் செந்தூரன் 50 ஓட்டங்களையும் சஜீபன் 35 ஓட்டங்களையும் தமது அணிசார்பாகப் பெற்றுக் கொடுத்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வீரர்களான கார்த்திக் 5 விக்கெட்டுக்களையும் ராகுலன் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த திருஷன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த களத்தடுப்பாளராக கொக்குவில் இந்துக் கல்லூரி அணித்தலைவர் உத்தமகுமரன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த ஆட்டநாயகனாக கொக்குவில் இந்துக் கல்லூரி யைச் சேர்ந்த ராகுலன் தெரிவு செய்யப்பட்டார்.


No comments:

Post a Comment

Give us your comments about our articles concisely and lucidly