நாங்கள் படித்த அந்த முன் பள்ளி
கூரையின்றிக் கிடக்கின்றது
எண்பத்து நான்கில் விழுந்த
எறிகணையில் சிதைந்து போனது
எண்பத் தெட்டில் அமைதிப் படை
எனும் பெயரில் வந்திறங்கிய
இந்திய ஆட்கொல்லிப்படை
டாங்கி சுவரை தகர்த்தது
எங்கள் ஆசிரியை தவமலர்
குடும்பத்தொடு அழிந்தா
இரவோடு இரவாக
விமானக் குண்டு வீச்சால்
பின் வாங்குக் குளப்படிகாரர்
சுகந்தனும் குண்டுக் காந்தனும்
வாக்குக் கண் வாமனும்
காணாமற் போனோர் பட்டியலில்
சும்மா இருந்த சுமதியையும்
கமலினியையும் சுந்தரியையும்
அமைதிப் படையினர் அநியாயமாய்
கெடுத்துக் கொன்றனர்
சந்தியில் நின்று வெட்டியாக
சைக்கிளோடு கதைத்துக் கொண்டிருந்த
சந்திரனும் சாந்தனும் கட்டைக் கதிரும்
ஆமிக்காரங்கள் சுட்டுப்
போட்டுப் போட்டாங்கள்
ஆமிக்காரங்கடை பிரச்சினைக்கு
பயந்தொழிச்சோடி மட்டக்கிள்ப்பில்
மாமியாரோடை இருந்த மனோவை
சுனாமி கொண்டு போயிட்டுது
ஓமானுக்கு போன ஓணான் தலையன்
அவுணேஷன் சாலை விபத்தில்
அங்கு மண்டையைப் போட்டான்
கறுப்பியென்று நாங்கள் நக்கலடிக்கும்
செம கட்டை சொரூபி கல்யாணம் கட்டி
கனடா போனவள் கள்ளரால்
கத்திக் குத்தில் மாண்டாள்
ரஜனி ஸ்ரைல் விட்டுக்கொண்டு
திரிஞ்ச கரியன் சுரேஷ்
தூள் வித்துப் பிடிபட்டு
இந்தியாவில் சிறையிலை இருக்கிறான்
பயந்தாங் கொள்ளி நிமலும்
ஒல்லி கமலும் இம்ரான்-பாண்டியன்
படையணியில் இணைந்து
மாவிரராய்ப் போனாங்கள்
திக்குவாய்த் தீபா
கடற்கரும் புலியாகி
டோராவோடு சிதறினாள்
தெத்திப் பல் அபியும்
சொத்திவாய் ஹேமாவும்
சப்பட்டை சியாமாவும்
எங்கு போச்சினம் என்னாச்சினம்
எண்டு யாருக்கும் தெரியாது
எப்பவும் முதலாம் பிள்ளையாய்
வரும் அப்பாவி ரமணன்
விரிவுரையாளாயிருந்தவனை
கடத்திக் கொண்டு போய்
கப்பம் கேட்ட ஒட்டுக் குழு
சுட்டுப் போட்டு கடலுக்கை போட்டாங்கள்
வெளிநாட்டுக் கென்று
காணி ஈடுவைத்து
பத்து லட்சம் பணத்தோடு
போன குரு போனது போனதுதான்
பாரக்கப் போனால்
எஞ்சியிருப்பது நீயும் நானும் தான்.
No comments:
Post a Comment
Give us your comments about our articles concisely and lucidly